விருதுநகர்-தென்காசி இடையே 40 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்: மின்மயமாக்கும் பணிகள் நிறைவு

சிவகாசி, மார்ச் 28: விருதுநகர்-தென்காசி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் நேற்று முன்தினம் 40 கி.மீ வேகத்தில் மின்சார ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர்-தென்காசி, திருநெல்வேலி-தென்காசி, தென்காசி-செங்கோட்டை இடையேயான அகல ரயில்பாதை மின்மயமாக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. செங்கோட்டை-சென்னை மார்க்கத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக பொதிகை விரைவு ரயில், சென்னை-கொல்லம் விரைவு ரயில் தினமும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் 3 நாட்களும் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் டீசல் இன்ஜினுடன் புறப்படும் இந்த விரைவு ரயில்கள், மதுரை அல்லது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மின்சார இன்ஜின் மாற்றப்பட்டு சென்னை செல்லும்.இந்நிலையில் திருநெல்வேலி-தென்காசி இடையே ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் முடிந்து, கடந்த 13ம் தேதி மின்சார இன்ஜின் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. விருதுநகர்-தென்காசி, தென்காசி-செங்கோட்டை இடையே கடந்த ஓராண்டாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மின்மயமாக்கும் பணி தற்போது 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது. விருதுநகர்-தென்காசி அகல ரயில் பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் அதிக உயரத்தில் பாரங்கள் ஏற்றிக் கொண்டு தண்டவாளத்தை கடந்து செல்லும் போது மின் கம்பிகளில் உரசினால் விபத்துகள் ஏற்பட கூடும்.இதனால் கிராசிங் பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டுகள் முன்பு இருபுறமும் உயர தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றன. தற்போது இந்த பணிகளும் முடிவடைந்துள்ளன. விருதுநகர்-தென்காசி வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதால், ேநற்று முன்தினம் மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. 40 கி.மீ. வேகத்தில் மின்சார ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதால் விரைவில் விருதுநகர்-தென்காசி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என எதிா்பார்க்கப்படுகிறது.இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 2020ம் ஆண்டு செங்கோட்டை-தென்காசி-விருதுநகர் மற்றும் தென்காசி-திருநெல்வேலி இடையிலான சுமார் 209 கி.மீ தூர அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது தென்காசி-திருநெல்வேலி, தென்காசி-செங்கோட்டை, தென்காசி-விருதுநகர் இடையே மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. வரும் ஏப்.8ம் தேதி செங்கோட்டை-தாம்பரம் இடையே திருநெல்வேலி வழியாக வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அன்று புதிதாக அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தில், அனைத்து ரயில்களையும் இயக்க தேவையான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்….

The post விருதுநகர்-தென்காசி இடையே 40 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்: மின்மயமாக்கும் பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: