வெயிலை சமாளிக்க சிறப்பு திட்டம் தேவை: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் வெயிலை சமாளிக்க சிறப்புத் திட்டம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:வெயிலின் தாக்கத்தால் தமிழ்நாடு இரு வழிகளில் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் மரங்கள் மற்றும் பசுமைப் பரப்பின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.இனி வரும் ஆண்டுகளில் புவி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதனால், கோடைகாலத்தில் திறந்தவெளியில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படும். கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும். எனவே, தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும் வெப்பத்தை சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். ஒவ்வொரு நகருக்கும் ஒரு பசுமை செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலம் வெப்பத்தை விரட்டியடிக்க முடியும். தமிழகம் முழுவதும் உள்ள பசுமைப் பகுதிகளையும், சதுப்பு நிலங்களையும் இனி அழிக்க மாட்டோம் என்று அரசு உறுதியேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>