அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 2 லட்சத்தை நெருங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதிலிருந்து இந்திய மக்களை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்கப் போகிற நடவடிக்கைகள் என்ன? ஆனால், கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய பா.ஜ. அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

137 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடின்றி கொரோனா தடுப்பூசி போட வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகும். அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக தடுப்பூசிகளை பா.ஜ. அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?. வாக்களித்து பிரதமராக்கிய மக்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரதமர் மோடியை இந்திய மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.  உலக அரங்கில் தமது புகழை உயர்த்துவதற்காக இந்தியாவில் தயாராகும் தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற பிரதமர் மோடியின் அணுகுமுறையை எவரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: