கொரோனா தொற்று பாதிப்பை காட்டிலும் மோடிக்கு மேற்குவங்க தேர்தல்தான் முக்கியம்: மகாராஷ்டிரா காங். தலைவர் குற்றச்சாட்டு

மும்பை: கொரோனா தொற்று பாதிப்பை காட்டிலும் மோடிக்கு மேற்குவங்க தேர்தல்தான் முக்கியம் என்று மகாராஷ்டிரா காங். தலைவர் குற்றம்சாட்டினார்.மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் கொரோனா விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் கூட்டமாக பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோலே கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது என்பதை, சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் பிரதமர் மோடியோ தேர்தல் பிரசார கூட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மோடிக்கு மேற்குவங்க தேர்தல்தான் பிரதான பிரச்னையாக உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை. மேற்கு வங்கத்தில் தேர்தலை முடித்த பிறகு தான் பிரதமர் மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பார். ஏப். 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. அந்த சமயத்தில் பிரதமர் மோடி முகத்தில் முகக் கவசம் கூட அணியாமல் பெருமளவு மக்களை கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்கிறார். மக்களின் உயிரை விட அவருக்கு தேர்தல்தான் முக்கியம். பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்துகொள்வதன் மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு எதை உணர்த்த விரும்புகிறார்? மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு உண்மையிலேயே டெல்லியில் ஏதேனும் செல்வாக்கு இருந்தால், அவர் மகாராஷ்டிராவுக்கு வந்துசேர வேண்டிய 90 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் பிற திட்டங்களை பெற்றுத்தருவதாக உறுதி வழங்கவேண்டும்’ என்றார்.

Related Stories:

>