கும்பகோணம் ஜிஹெச்சில் சிறப்பு முகாம் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் 80 பேர் பயன்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் தண்டுவடம் காயம்பட்டோர் அமைப்பு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதல்வர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் மூன்று கட்டங்களாக நடத்திட திட்டமிடப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முகாமும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரண்டாவது முகாமும், தற்போது கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் நலனுக்காக மூன்றாம் கட்டமாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த தலைசிறந்த மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்துள்ளனர். இந்த முகாமில் சுமார் 30 பயனாளிகள் பயன் பெறுவார்கள் என நம்புகின்றோம். நமது மாவட்டத்தை பொருத்தவரையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 என்ற ஒரு கணக்கு உள்ளது. தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் 80 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மீதம் உள்ளவர்கள் கும்பகோணம் பகுதியில் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அறுவடை பணிகள் நிறைவு பெற்று விட்டது. எதிர்பார்த்ததை விட நெல் கொள்முதல் பணிகள் சிறப்பாக இருந்தது. அடுத்த 10 நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கும்பகோணம் ஆர்டிஓ பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் திலகம், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமரூல் ஜமான், நிலைய மருத்துவர் பிரபாகரன், மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் துணை தலைவர் முத்துக்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்துவர் நமச்சிவாயம், மாநகர் நகர்நல அலுவலர் பிரேமா, தஞ்சை மாவட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் அமைப்பின் தலைவர் ஜெயராஜ், கும்பகோணம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

The post கும்பகோணம் ஜிஹெச்சில் சிறப்பு முகாம் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் 80 பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: