ஏலகிரி மலையில் 6வது முறையாக மர்ம நபர்கள் வைத்த தீயால் அரியவகை மரம், மூலிகை செடி, கொடிகள் எரிந்து நாசம்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் நேற்று மர்ம நபர்கள் வைத்த தீயால் காட்டுப்பகுதியில் தீப்பிடித்து அரிய வகை மரங்கள், மூலிகை வகை செடி, கொடிகள் எரிந்து நாசமானது. ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் 6வது முறையாக மண்டலவாடி அருகே உள்ள   மலையடிவாரத்தில் மர்ம நபர்கள்  வைத்த தீயால்  சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு  மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த காட்டுத்தீயால் காட்டிலிருந்த அரியவகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், புல் வகைகள் மற்றும் சிறிய வகை  ஆமை, மலைப்பாம்பு, முயல் உள்ளிட்ட உயிரினங்கள் கருகியது.

மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் காட்டுப்பகுதிக்குள் காய்ந்திருக்கும் மரங்கள், செடி, கொடிகள் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் தீப்பிடித்து அனைத்தும் எரிந்து நாசமாகிறது.  இந்நிலையில், 6வது முறையாக மர்ம நபர்கள் வைத்த தீயில்  ஏலகிரி மலையில் நேற்று தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: