வேளச்சேரியில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது: நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு...!! 548 பேர் வாக்களிக்க உள்ளனர்: தேர்தல் ஆணையம் தகவல்

வேளச்சேரி: வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதில் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில், மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் வைத்து இரு தேர்தல் பணியாளர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, வேளச்சேரி தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பழுதான மற்றும் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் எடுத்துச் செல்லப்பட்டது என்று தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை 50 நிமிடங்கள் பயன்படுத்தி 15 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

மேலும், இதன்மூலம் முழுக்க முழுக்க தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருப்பது உறுதியாகியுள்ளதாகவும், வேளச்சேரியில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதால் சென்னை வேளச்சேரி தொகுதியில் 92வது எண் கொண்ட வாக்குச்சாவடிக்கு வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு என்றும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் உள்ள 548 பேர் மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க உள்ளனர். மறுவாக்குப்பதிவு குறித்து ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

Related Stories:

>