கிச்சனிலும் தோட்டம் அமைக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

சில ஆண்டுகளுக்கு முன் தாய்ப்பாலில் விஷம் கலந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தோம். இப்போது தினமும்  சமையலறையில் சுவைபட சமைத்து உண்ணக் கொடுப்பதும் விஷம் தான் என்று அதிர வைக்கிறார் ஆரண்யா அல்லி. ஜன்னல் தோட்டத்தில் துவங்கி,  மாடித் தோட்டம், வட்டப்பாத்தி முறையிலான காய்கறி, கீரைத் தோட்டங்களையும் அமைத்துக் கொடுத்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி  வருகிறார். சேலம் பகுதியில் மிஞ்சியிருக்கும் கைத்தறி நெசவாளர் பெண்களைக் கொண்டு கைத்தறி நெசவைக் காப்பாற்றும் பணியிலும் தீவிரமாக  இறங்கியுள்ளார்.

கிச்சன் கார்டனுக்கான இன்றைய தேவை குறித்து நம்மோடு விரிவாகப் பேசுகிறார் அல்லி. ‘‘இன்றைய குழந்தைகளின் உணவுக் கலாச்சாரம் நிறையவே  மாறியுள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் சுவைகள், வணிகமயப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்டவை, வண்ணமயமாக்கப்பட்ட உணவுகள், வாசனை  மிகுந்த உணவுகள் என இவற்றை வகைப்படுத்த முடியும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான சத்துக்கள் அந்த உணவில் இருக்க  வேண்டும். ஆனால் அப்படியான சத்துக்கள் உள்ளதா என நம்மையே கேட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவு ஆலோசகர்களை நாடினால் காய்கறி, கீரை மற்றும் பழங்கள்  கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கடைகளில் பிரஷ்ஷாக, பூச்சி கடிக்காத கீரை, கலர்ஃபுல்லான காய்கள் மற்றும் பழங்களை வாங்கிக்  கொடுக்கின்றனர். பூச்சியே கடிக்காமல் கீரை வளர வேண்டும் என்பதற்காக பலவிதமான ரசாயனங்களும், பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்படுகிறது.  நுகர்வோரின் விருப்பத்தையும், தேவையையும் பூர்த்தி செய்யும் படியாக விவசாயிகள் இது போன்ற யூரியா மற்றும் பூச்சிக் கொல்லிகளைப்  பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

தன் வீட்டுக் குழந்தைக்கும் உறவுகளுக்கும் ஆரோக்கியமான உணவளிக்க விரும்பும் பெண்களுக்கு கிச்சன் கார்டன் சரியான தீர்வாக உள்ளது. கிச்சன்  கார்டன் போட வேண்டும் என்ற மனமிருந்தால் போதும். ஜன்னல் கம்பியில் ஹேங்கிங் செய்தும் செடிகளை வளர்க்கலாம். இருக்கும் இட வசதிக்கு  ஏற்ப குரோ பேக்குகள் பயன்படுத்தியும் தின சமையலுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உற்பத்தி செய்ய முடியும். பயன்படாத  வேஸ்ட் ஜீன்ஸ், பனியன் உட்பட எதிலும் செடி வளர்க்கப் பயன்படுத்தலாம்.

நம்ம குடும்பத்துக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்ய முடியும்’’ என்ற அல்லி என்னென்ன காய்கறிகளை கிச்சன் தோட்டத்தில்  விளைவிக்கலாம் என்று விவரித்தார். ‘‘குறைந்தபட்சம் 2000 ரூபாயில் இருந்து 25000 ரூபாய் வரை இடத்துக்கு ஏற்ப கிச்சன் கார்டன் அமைக்கலாம்.  வீட்டுக்குத் தேவையான அனைத்து காய்கறிகள், தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய் என வெரைட்டியாக பயிரிட்டு அறுவடை செய்ய முடியும்.  விவசாய நிலம் இல்லாதவர்களுக்கு குரோ பேக்காக நிலைத்தை தான் பரிசளிக்கிறோம்.

இதனைப் பல ஆண்டுகளுக்கு செடிகள் வளர்க்கப் பயன்படுத்தலாம். செடிகள் வளர்க்கத் தேவையான மண், விதைகள், இயற்கை உரம் தயாரித்து  பயன்படுத்தும் முறை, பராமரிப்பு அனைத்தும் கற்றுக் கொடுக்கிறோம். வீட்டுத் தோட்டம் போட்டவர்களுக்கான வாட்ஸ்ஆப் குரூப் வழியாக  சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறோம். ஒரு வீட்டில் கீரை அல்லது காய் அதிகமாக இருந்தால் மற்றவர்களுடன் பண்ட மாற்றும் நடக்கிறது. இயற்கை  விவசாயம் பெரிதளவில் நடக்க வேண்டுமென்றால் வீட்டில் இருந்து இதற்கான மாற்றம் துவங்க வேண்டும்.

தான் வளர்த்த செடியில் நச்சு இல்லாத காய்கறிகளை சாப்பிடப் பழகிவிட்டால் வேறு எதுவும் பிடிக்காது. இதில் நமது தேவைக்கு ஏற்ப மூலிகைக்  கீரைகளும் பயிரிடலாம். செடிகள் வளர்ப்பதும், அதன் பச்சை வண்ணமும் நம் மன வலிகளுக்கு மருந்தாகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்படாமல்  தடுக்கலாம். சின்னச் சின்ன செடிகளில் பூக்கும் அதிசயத்தை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளும் போது நம்மை அறியாமல் மகிழ்ச்சி ஏற்படும்.  இதற்காக செலவிடும் நேரம் மிகவும் குறைவு. பத்துச் செடிகளைப் பராமரிக்க காலையில் 10 நிமிடம், மாலையில் 10 நிமிடம் போதும்.

சமையலறைக் கழிவு நீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம். தண்ணீர்ச்செலவும் பெரிதாக இருக்காது. காய்கறிக் கழிவுகளையும் மண்ணையும் ஒரு குரோ  பேக்கில் சேமித்து செடிகளுக்கான இயற்கை உரத்தையும் எளிதாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தக் காய்கறிகளை சாப்பிடும் குழந்தைகளின்  உடல் நிலை, மனநிலை இரண்டும் பாதுகாக்கப்படும். காய்கறிகளுக்காக  ஒதுக்கப்படும் பட்ஜெட், மருத்துவச் செலவுகளும் மிச்சப்படும்.

சிறிய அளவில் துவங்கும் இது போன்ற விவசாய முறைகள் ஒரே பகுதியில் வசிக்கும் பெண்கள் இணைந்து அவர்கள் பகுதியில் உள்ள  காலிமனைகளை கீரைத் தோட்டங்களாக மாற்றலாம்.  அபார்ட்மென்ட் வாசிகள் என்றால் மாடித் தோட்டம் போடலாம். கிச்சன் கார்டனிங் என்பது சிறு  துளி, இயற்கை வேளாண்மையே பெருவெள்ளம். அடுத்த தலைமுறை விவசாயம் முழுக்க முழுக்க நஞ்சில்லாமல் மாற வேண்டும். ஒவ்வொரு  வீட்டிலும் அந்த மாற்றத்துக்கான வழியை இப்போது இருந்தே விதையிடுங்கள்’’ என்றார் ஆரண்யா அல்லி.

யாழ் ஸ்ரீதேவி

Related Stories: