பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்த ஏற்பாடு

கிருஷ்ணகிரி, மார்ச் 27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதியும், பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு கடந்த 14ம் தேதியும் துவங்கியது. அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தேர்வுகள் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகளில் பயிலும் 10,167 மாணவ, மாணவிகளும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 118 பள்ளிகளில் பயிலும் 14,245 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 24,412 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ஓசூர் கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 14ம் தேதி துவங்கிய 11ம் வகுப்பு பொதுத் தேர்வினை, ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,887 மாணவ, மாணவிகள் 36 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 12,272 மாணவ, மாணவிகள், 51 தேர்வு மையங்களிலும் என 20,159 மாணவ, மாணவிகளுக்கு 87 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. தேர்வு எழுதாதவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேர்வு எழுதாதவர்களை வரும் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று எழுத வைக்க, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில், விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் துவங்க உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மையங்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வின் விடைத்தாள்கள், தினமும் வேறு மாவட்ட பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல், பிற மாவட்டங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்களான கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையங்களில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். …

The post பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: