எஸ்400 ஏவுகணை ஒப்பந்தம் நிறைவேறும்: ரஷ்யா உறுதி

புதுடெல்லி: ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் காலக்கெடு, பிற விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல்  செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ஏற்கனவே, ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் கொள்முதல் செய்த துருக்கியின் மீது  அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்நிலையில், தரையில் இருந்து வானில் 400 கிமீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை  இடைமறித்து தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை ஆயுத கருவியை  வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டுடன் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் 5 எஸ்-400 ஏவுகணை ஆயுத கருவியை கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை கருவியை வாங்கினால் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க கூடும் என்ற அச்சுறுத்தல் நிலவுகின்றது. கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஸ்டின், எஸ்400 ஏவுகணைகள் இந்தியாவிடம் இன்னும் வழங்கப்படாததால் இந்தியா மீதான தடைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவிற்கான ரஷ்யா தூதர் நிகோலே குடசேவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இருதரப்பு பொருளாதார தடை என்பது நியாயமற்ற மற்றும் சட்ட விரோத போட்டி, அழுத்தம் மற்றும் மிரட்டலுக்கான சட்ட விரோத கருவி என்பதால் இந்தியாவுடன் இணைந்து அவற்றை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. எஸ்-400 ஏவுகணை மற்றும் மிகப்பெரிய ஒப்பந்தங்களின்படி காலக்கெடு மற்றும் பிற விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு ரஷ்யாவும் இந்தியாவும் உறுதி பூண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்,” என்றார்.

Related Stories: