பாஸ்டேக் கட்டாயத்தால் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கவில்லை: ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

மும்பை: தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை, மக்கள்  எந்த பகுதிக்கும் சுதந்திரமாக செல்லலாம் என்ற அடிப்படை உரிமையை எந்த  வகையிலும் பாதிக்கவில்லை என, மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி  கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க  வேண்டியிருந்தது. இதனால், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இது தற்போது கட்டாயமாக்கப்பட்டு  நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பது  தவிர்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடைமுறையை  எதிர்த்து, அர்ஜூன் கானாபுரே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நலன்  மனு தாக்கல் செய்தார். அதில்,  தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு  பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை காரணமாக, மக்கள் நாட்டின் எந்த  இடத்துக்கும் சுதந்திரமாக சென்று வரலாம் என்ற அடிப்படை உரிமையை மீறுவதாக  உள்ளது என கூறியிருந்தார்.  இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய  அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு பதில்  அளித்து மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சுங்கச்சாவடிகளில்  காத்திருப்பதை தவிர்த்து வாகனங்கள் தடையின்றி சென்று வருவதற்காகவே பாஸ்டேக்  கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பயண நேரம் குறைகிறது.  இதில் எந்த விதிமீறலும் இல்லை. மேலும், பாஸ்டேக் கட்டாயம்  ஆக்கப்பட்டதால் மக்கள் நாட்டின் எந்த இடத்துக்கும் சென்று வரலாம் என்ற அடிப்படை  உரிமை பாதிக்கப்படவில்லை. இந்த உரிமை எந்த  வகையிலும் பாதிக்கப்படவில்லை,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: