உபி.யில் முதல்வர் யோகி, அகிலேசுக்கு கொரோனா

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருந்தது. இதனால், நானே பரிசோதனை செய்து கொண்டேன். இதில், எனக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,’ என பதிவிட்டுள்ளார். இதேபோல், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் அசுதோஷ் தண்டனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சுய பரிசோதனை மூலம் நோய் பாதிப்பை உறுதி செய்து கொண்ட அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், ‘எனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: