பயோமெட்ரிக் முறை விநியோகத்தில் ரேஷனில் ‘பிராக்ஸி’ முறைக்கு எதிர்ப்பு: அதிகாரிகள் மிரட்டுவதாக ஊழியர்கள் புகார்

விருதுநகர்: ரேஷன் பயோமெட்ரிக் முறை விநியோகத்தில் சர்வரில் உள்ள ‘பிராக்ஸி’ முறையை முற்றிலும் அகற்றவேண்டும் என கடை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கார்டுதாரர்களுக்கு பிஓஎஸ் மிஷின் மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி விநியோகம் செய்யப்படுகிறது. கைரேகை பதிவு முறையில் ஒரு பயோமெட்ரிக் கார்டை ஸ்கேன் செய்து, கார்டுதாரர் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் விநியோகிக்க முடியும். ஆனால் பயோமெட்ரிக் முறையில் கார்டுதாரர் மட்டுமின்றி எந்த நபரின் கைரேகையை வைத்தாலும் விநியோகம் செய்வதற்கான நடைமுறையை உணவு வழங்கல் துறை புகுத்தியுள்ளது. இதனை ‘பிராக்ஸி’ என்கின்றனர். அதாவது, முதியவர் ஒருவரது கைரேகை அழிந்திருக்கும் பட்சத்தில், கடைக்காரரோ, பிறரோ கைரேகை வைத்து அவரது கார்டுக்கு பொருள் வழங்கும் வசதியை பிஓஎஸ் மிஷின் சாப்ட்வேரில் வைத்துள்ளனர்.

இதுதவிர, பொருள் வாங்க வரும் ஒரு கார்டுதாரர் இந்த மிஷினில் கைரேகை வைத்து அது சரியாக ஸ்கேன் ஆகாத நிலையில், மறுபடியும் கைரேகை வைத்தால், அந்த மிஷின் முதலில் வைத்த கைரேகையை ஏற்க முடியாமல் போய், அடுத்து வைக்கும் கைரேகையை ஏற்றாலும், 2வது கைரேகையை ‘பிராக்ஸி’ (பதிலி) கைரேகையாகவே ஏற்கிறது. ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள், கடை ஊழியர்களிடம் உண்மையான நபர்களுக்கே பொருட்கள் விநியோகம் செய்திருந்தாலும், வேறொருவர் கைரேகையை வைத்து பொருட்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டுவதாகவும், இதனைக் கூறி அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கடை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொது விநியோக ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிராக்ஸி நடைமுறையை சென்னை சர்வரில் புகுத்தி வைத்துள்ள பிஓஎஸ் நிறுவனத்தினரும், உணவு வழங்கல் துறையினரும் கார்டுதாரரின் கைரேகை வைத்தால் மட்டுமே பயோமெட்ரிக் முறை செயல்படும் வகையில் சர்வரை சரிசெய்ய வேண்டும். ‘பிராக்ஸி’ (வேறொருவரும் கைரேகை வைக்கலாம்) என்ற நடைமுறையை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு பிராக்ஸி விநியோகம் எனக்கூறி கடை விற்பனையாளர்களை குறைகூறி, அதிகாரிகள் மிரட்டி பணம் வசூல் செய்வது கண்டனத்திற்குரியது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர். இந்த ‘பிராக்ஸி’ முறை பல்வேறு தவறுகளுக்கும் வழிவகுக்கும் என்பதால், இதனை அகற்றிட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கைரேகை பாதித்த முதியவர்கள் உள்ளிட்டோர் இதற்கென மாவட்ட வழங்கல் துறையிடம் கடிதம் பெற்று, அதனை கடைக்காரரிடம் காட்டும் நடைமுறையை பின்பற்றலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா குறையும் வரை கைரேகை பதிவு வேண்டாம்.

கொரோனா 2வது அலை பரவல் வேகம் காட்டும் நிலையில், தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க கையுறை வழங்கப்பட்டது. ஆனால் ரேஷனில் ஒரே மிஷினில் ஒவ்வொரு நபருக்கும் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. கைரேகை பதிவால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால், தொற்று பரவல் நிற்கும் வரை பயோமெட்ரிக் முறையில் கார்டுகளை மட்டும் ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம் செய்ய உரிய உத்தரவை கூட்டுறவுத்துறை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>