உணவுக்கு முன்... பின்... என்ன செய்யலாம்?

நன்றி குங்குமம் தோழி

குடும்பப் பொறுப்புகளை தோளில் வாங்கிக் கொள்ளும் பெண்கள் தனக்கான உணவை இரண்டாம் பட்சமாகக் கருதுகின்றனர். வீட்டில் உள்ள அத்தனை  உறவுகளுக்கும் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுக்கும் பெண்கள் எப்போது சாப்பிடுகிறார்கள்? எத்தனை வேளை உணவைத் தவிர்க்கிறார்கள் என்று  எதையும் வீட்டில் உள்ள யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் பெண்கள் அல்சர், ரத்தசோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு  ஆளாகின்றனர்.

உணவுக்கான நேரத்தையும் பெண்கள் முறைப்படி பின்பற்றுவதில்லை. இரண்டு வேலைகளுக்கு நடுவில் கிடைக்கும் நேரத்தில் உணவினை அள்ளிப்  போட்டுக் கொள்கின்றனர். அலுவலகம் செல்லும் பெண்களைக் கேட்கவே வேண்டாம். அவசரத்தில் உணவருந்தி, பயணங்களில் சாப்பிட்டு, உடனே  தூங்கி என்று அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். பசிக்கும் நேரத்தில் டீ குடித்துவிட்டு வேலையிலேயே மூழ்கி விடுகின்றனர்.  இவையெல்லாம் பின்னாளில் நோயாக வளர்ந்து பெண்களை பாதிக்கிறது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையும், டென்ஷனும் உணவு எடுத்தோமா, இல்லையா என்பதையும் மறக்கச் செய்கிறது. உணவு எடுப்பதே  சவாலான வேலையாக பெண்களுக்கு உள்ளது. அப்படி உண்ணும் உணவிலும் பெண்கள் சரியான ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதில்லை. இதுவும்  அவர்களின் உடல் நலனை பாதிக்கிறது. உணவுக்கு முன்னும் பின்னும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்குகிறார் உணவு  ஆலோசகர் சங்கீதா.

‘‘பெண்கள் வீட்டில் இருக்கலாம், வேலைக்குப் போகலாம். உணவுக்கான நேரத்தைத்  திட்டமிடுவது மிகவும் அவசியம். எவ்வளவு வேலைகள்  இருந்தாலும், தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஒரு வேளை உணவைக்கூட தள்ளிப்போடக் கூடாது. காலை  உணவைத் தவிர்ப்பதையும் கைவிட வேண்டும். காலையில் எளிதில் ஜீரணமாகும் உணவு, 11 மணிக்கு பழக்கலவை, மதிய உணவில் புரதம் உள்ள  பருப்பு, காய், கீரை கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

மாலை வேளையில் பயறு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல் எடுத்துக் கொள்ளலாம். வேலைகள் எல்லாம் முடிந்து இரவு படுக்கைக்குச் செல்லும்  போதே பல பெண்கள் கடமைக்கு உணவருந்துகின்றனர். இரவு உணவை தூங்கப்போவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே எடுத்துக் கொள்ள வேண்டும்.  உணவுக்கான நேரத்தை ஸ்ட்ரிக்டாக பின்பற்ற வேண்டும். ஒரு மாதம் பழக்கப்படுத்திவிட்டால் எளிதாகிவிடும்.

*    பசித்தால் மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பசிக்கும் போது தான் நீங்கள் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கான  அமிலங்கள் வயிற்றில் சுரக்கும்.

*    ஜீரணப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து  சாப்பிடலாம். இது வாயுத் தொல்லை, ஜீரணப் பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

*    சாப்பிடும் உணவில் சரிவிகித சத்துக்கள் உள்ளனவா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*    உணவில் உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்க வேண்டும். இந்தச் சுவைகள் உண்ணும் போது  அந்தந்த உறுப்புகளுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது.

*    சாப்பிடும் முன்னர் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*    உணவுக்கு முன்னர் பழங்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் உணவில் உள்ள புரதம், இரும்புச்  சத்துக்களை உட்கிரகிப்பதால் உணவில் இருந்து உடலுக்கு சத்துக்கள் கிடைப்பது பாதிக்கப்படும். இதனால் உணவுக்கு அரைமணி நேரம் முன்னும்,  பின்னும் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

*    குளிர்ந்த தண்ணீர் பருகக் கூடாது.

*    உணவுக்கு முன்னர் அரை டம்ளர் வெது வெதுப்பான தண்ணீர் எடுக்கலாம்.

*    உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*    உணவு சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.

*    உணவு சாப்பிடச் செல்லும் முன்னர் ஆழமான மூச்சிழுத்து மனநிலையை அதற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

*    உணவை, ரசித்தும் ருசித்தும் உண்ண வேண்டும். உணவு எடுத்துக்கொள்ளும் போது தொலைக்காட்சி பார்ப்பது, கேட்ஜெட்ஸ்  உபயோகிப்பதைக் கைவிடலாம்.

*    சாப்பிட்ட உடன் தூங்குவது, குளிப்பது, நடப்பது, புகையிலை போடுவது, புகைப்பது, மது அருந்துவதையும்   தவிர்க்கவும்.

*    சாப்பிட்ட உடன் தூங்குவதால் உடல் எடை கூடும் வாய்ப்புள்ளது.

*    சாப்பிடும் முன்னும், சாப்பிட்ட பின்னும் ரிலாக்ஸ்டாக இருப்பது அவசியம். வாழ்க்கை நலமாகும்.

யாழ் ஸ்ரீதேவி

Related Stories:

>