×

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ₹2 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்

* 3 கி.மீ. போலீசார் விரட்டி மடக்கினர்* தப்பியோடிய 2 பேருக்கு வலை வீச்சு கே.வி.குப்பம் அருகே நள்ளிரவில் பரபரப்புகே.வி.குப்பம்: ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ₹2 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகளை கே.வி.குப்பம் அருகே போலீசார் 3 கி.மீ. தூரம் விரட்டி மடக்கி பிடித்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பரதராமி- பனமடங்கி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பனமடங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து பரதராமி வழியாக அதிவேகமாக வந்த சென்னை பதிவெண் கொண்ட காரை சோதனை செய்ய போலீசார் நிறுத்தினர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஏற்கனவே வாகன தணிக்கையில் ஈடுபட்ட லத்தேரி போலீசார், அங்குள்ள பனமடங்கி கூட்ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பனமடங்கியில் நிறுத்தாமல் சென்ற கார் அவ்வழியாக வந்ததை கண்டு நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் மீண்டும் நிற்காமல் மின்னல் வேகத்தில் போலீசாரை கடந்து சென்றது.இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அந்த காரை விரட்டினர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காமாட்சியம்மன் பேட்டை பகுதியில் அந்த காரை போலீசார் மடக்கினர். போலீசார் நெருங்கியதை பார்த்தவுடன் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்த 2 பேர் இறங்கி தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அதில், 12 செம்மரக்கட்டைகள் இருந்தது. அவற்றின் மதிப்பு ₹2 லட்சம் என கூறப்படுகிறது. ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து, நேற்று காலை வனத்துறை அலுவலர் ரவிக்குமார், வனவர் அருணா தலைமையிலான அதிகாரிகளிடம் காருடன் அந்த செம்மரக்கட்டகளை லத்தேரி போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, செம்மர கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எங்கு கடத்தி சென்றார்கள்? என வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணை குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘செம்மரக்கட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட காரில் இருந்த பதிவெண் மூலம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருட்டு போன காரின் பதிவெண் என தெரியவந்தது. இதுதொடர்பாக காரின் உரிமையாளர் போலீசிலும் புகார் அளித்துள்ளார். அந்த காரின் பதிவெண்ணை வேறு காருக்கு பயன்படுத்தி செம்மரக்கட்டைகளை கடத்தி உள்ளனர். மேலும் காரின் உள்ளே ஆந்திர பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்கள் இருந்தது. இதனால் ஆந்திராவில் அதை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. திருட்டு கார்களின் நம்பர்களை பயன்படுத்தி கும்பல் செம்மரக்கட்டைகளை கடத்தி இருப்பதால், கார் திருட்டு வழக்குகளிலும் தப்பி ஓடியவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக பல இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட உள்ளது’ என்றனர்….

The post ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ₹2 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,KV Kuppam ,Dinakaran ,
× RELATED கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணம் இன்றி...