ஆண்டிபட்டியில் சீசன் தொடக்கம் கொடிக்காய் கிலோ ரூ.200க்கு விற்பனை: வரத்து குறைவால் விலை உயர்வு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கொடிக்காய் சீசன் துவங்கியுள்ளதால் விலை உயர்ந்து தற்போது கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் அதிகளவு வாங்கி வருவதால் கிராக்கி  ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதிகளில் தெப்பம்பட்டி, அழகாபுரி, கணேசபுரம், வேலப்பர் கோவில், வண்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், திண்டுக்கல் போன்ற வெளிமாவட்டங்களிலும் அதிகளவு கொடிக்காய் மரம் உள்ளது. ஆண்டிபட்டி  பகுதியில் கொடிக்காய்க்கு என்று தோப்புகள் இல்லை என்றாலும், ஒவ்வொரு தோட்டத்திற்கு 5 முதல் 10 மரங்கள் வைத்து சீசனுக்கு ஏற்ப விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

கொடிக்காய் மரத்தில் உள்ள காய்களை வியாபாரிகள்  நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது கொடிக்காய் சீசன் துவங்கியுள்ளதால் அதிகளவு விற்பனை நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் கொடிக்காய்களை சாலை ஓரத்திலும், சந்தைகளிலும்,  தெருக்களிலும் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கொடிக்காய் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 200  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்ந்தாலும் மக்கள் கொடிக்காயை அதிகளவு விரும்பி வாங்கி வருவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் கொடிக்காயில் துவர்ப்பு காய், இனிப்பு காய் என பிரிக்கப்பட்டு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. சீசனுக்கு மட்டும் கொடிக்காய் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

Related Stories: