அதிமுக பிரமுகர் தோட்டத்தில் 7 சந்தன மரம் வெட்டி கடத்தல்: மல்லியகரை போலீசார் விசாரணை

கெங்கவல்லி: ஆத்தூர் அருகே அதிமுக நிர்வாகியின் தோட்டத்தில், மர்மநபர்கள் 7 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்திச்சென்றனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரவி(48). இவர் தனது உறவுக்காரரான ஜெயலட்சுமிக்கு சொந்தமான விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரிப்பு செய்து வருகிறார். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 80 சந்தன மரங்கள் நட்டு வளர்த்து வருகிறார். அதில் 4 சந்தன மரங்கள் வீணானது. 76 சந்தன மரங்களை வளர்த்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவரது தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், 20 அடி உயரம் வளர்ந்துள்ள 8 சந்தன மரங்களை வெட்டியுள்ளனர். அதில் ஒரு மரத்தை அங்கேயே விட்டுவிட்டு, 7 மரங்களை கடத்திச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்ற ரவி, சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரவி, ஆத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனசரகர் செந்தில்குமார் மற்றும் வனக்காப்பாளர் ஆகியோர்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ஜெயலட்சுமி, மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இதனிடையே ரவி, போதிய பாதுகாப்பு வழங்க முடியாததால், தங்களது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் மீதமுள்ள 68 சந்தன மரங்களை, தமிழக அரசே எடுத்து கொள்ளுமாறு, வனசரகர் செந்தில்குமாரிடம் மனு வழங்கியுள்ளார்.

Related Stories: