ஜனாதிபதி உத்தரவின்படி தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார்

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவின்படி தலைமை தேர்தல் ஆணையத்தின் 24வது புதிய ஆணையராக சுஷில் சந்திரா நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் கடந்த 12ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து மூத்த தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திராவை தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக நேற்று முன்தினம் நியமனம் செய்து ஜனாபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் 24வது புதிய ஆணையராக அவர் பதவியேற்றுக் கொண்டார். வழக்கமாக ஜனாதிபதி தான் பதவி பிரமாணத்தை செய்து வைப்பார்.

ஆனால் கொரோனா காலம் என்பதாலும், ஜனாதிபதிக்கு இருதய சிகிச்சை முடிந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தான் வீடு திரும்பினார் என்பதாலும், அவரது உத்தரவின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. இவரது பதவிக்காலத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் உத்தரப்பிரதேச தேர்தல் என்பது மிகவும் சவாலானது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணைய பணியில் சேர்வதற்கு முன்னதாக சுஷில் சந்திரா மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவராக இருந்தார். இதுவரை இவர் 10 மாநிலத் தேர்தலில் மூத்த தேர்தல் ஆணையராக தனது பங்களிப்பை அளித்துள்ளார். வேட்புமனு தாக்கலை ஆன்லைனில் செய்யும் முறையைக் இவர் தான் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: