மங்களூரு அருகே நடுக்கடலில் குமரி மீனவர்கள் படகு மீது கப்பல் மோதி 3 பேர் பலி: நீரில் மூழ்கிய 9 பேர் மாயம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் குமரி மீனவர்களின் விசைப்படகு மீது வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதியதால் 3 பேர் உயிர் இழந்தனர். 9 பேர் மூழ்கி மாயமானார்கள்.  குமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த மீனவர்கள், கேரள மாநிலம், கோழிக்கோடு  அருகே உள்ள பேப்பூரில் தங்கி  மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இரவு ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த படகில் குளச்சல், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் இருந்தனர்.நேற்று முன்தினம் இரவு மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, அவ்வழியாக சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதியது. இதில் விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் அனைவரும் கடலில்  தத்தளித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களூரு கடலோர பாதுகாப்பு படைசம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புபணியில் ஈடுபட்டது. இதில் குளச்சலை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகியோர் மீட்கப்பட்டனர். இவர்கள் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 மீனவர்கள் உயிர் இழந்தனர். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. மாயமான 9 மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories: