உறவினருக்கு அரசுப்பணி தந்ததாக புகார்: கேரள அமைச்சர் ஜலீல் ராஜினாமா

திருவனந்தபுரம்: முறைகேடாக உறவினருக்கு அரசு பணி வழங்கியதாக கூறப்பட்ட புகாரில் கேரள உயர் கல்வி துறை அமைச்சர் ஜலீல் ராஜினாமா செய்துள்ளார். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் அமைச்சரவையில் உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தவர் ஜலீல். இவரது உறவினர் அதீப் என்பவர் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் கடந்த இருவருடங்களுக்கு முன் அதீப்பை சிறுபான்மை நலத்துறை ெபாதுமேலாளராக அமைச்சர் ஜலீல் நியமித்தார். உறவினருக்கு இந்த பதவியை வழங்குவதற்காக அந்த பதவிக்கான தகுதியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. இதையடுத்து முறைகேடாக உறவினருக்கு பதவி வழங்கிய அமைச்சர் ஜலீலுக்கு எதிராக முஸ்லீம் லீக் சார்பில் லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ‘அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஜலீல் அமைச்சர் பதவியை தொடர்வதற்கு உரிமை இல்லை. அவரை முதல்வர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,’ என்று  கூறப்பட்டது. இதையடுத்து, லோக் ஆயுக்தா தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஜலீல் அப்பீல்  ெசய்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே நேற்று அவர் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்தார். இந்த கடிதம் உடனடியாக கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அமைச்சர் ஜலீலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

Related Stories: