சேலத்தில் ஆடியோ வைரலால் அம்பலம்: 10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை: பெற்றோர், தொழிலதிபர் கைது: மனைவி, மகன்கள் சென்னைக்கு பிரிந்து சென்றனர்

சேலம்: சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சின்னபொண்ணு என்பவர், சேலம் டவுன் போலீசில் அளித்த புகாரில் தனது மகள், சீலநாய்க்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (54) என்ற தொழிலதிபரிடம் 7 வயது பேத்தியை அனுப்பி வைத்து விட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய், உறவுக்கார பெண் ஒருவருடன் பேசும் ஆடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், சிறுமியை 10 லட்சத்திற்கு தொழிலதிபருக்கு விற்று விட்டதாகவும், தனது மகளை அவர் நன்றாக பார்த்துக்கொள்வார் எனவும் பேசியிருந்தார். இதனையடுத்து, தொழிலதிபர் கிருஷ்ணன், சிறுமியின் தாய் சுமதி (26), தந்தை சதீஷ்குமார் (30) ஆகியோர் மீது டவுன் அனைத்து மகளிர் போலீசார், இளஞ்சிரார் பாதுகாப்பு சட்டம் 80, 81, மற்றும் 370(ஏ)(பணம் கொடுத்து வாங்குவது), 372 (குழந்தையை விற்பனை செய்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து நேற்று காலை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் எதுவும் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்தும் பெண் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் கிருஷ்ணன் மீது போக்சோ சட்டம் பாயுமா? என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தொழிலதிபர் கிருஷ்ணன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஆலோசகராக இருந்து அதற்கும் மாதம் 1லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இவரது சொந்த ஊர் சென்னை. 20 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்தார். இவரது நடவடிக்கை பிடிக்காமல் மனைவி மற்றும் மகன்கள் சென்னைக்கு சென்று விட்டனர்.

இவரது பெற்றோர் கூட சென்னையில்தான் இருக்கிறார்கள். இவரது வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் 7 வயது மகளைத்தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளனர். இதற்காக ₹1.50 லட்சம் கொடுத்துள்ளார். அதையும் வட்டிக்கு கொடுத்ததாக கிருஷ்ணன் கூறுகிறார். என்றாலும் 6 மாதமாக சிறுமியை அவரது வீட்டில் வைத்திருந்தது தவறு. பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை விற்பனை செய்தது பெரும் குற்றம். எனவே கிருஷ்ணன் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

இதற்கிடையில் சிறுமியை மீட்டு 3 நாள் ஆன நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யாதது ஏன்? என இன்ஸ்பெக்டர் பழனியம்மாளுக்கு கமிஷனர் சந்தோஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கூடுதல் கண்காணிப்பாளர் கும்மராஜாவை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: