திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 டன் மலர், பழங்களால் யுகாதி சிறப்பு அலங்காரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 7 டன் மலர் மற்றும் பழங்களால் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி ஆஸ்தானம்) நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யுகாதியையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோயிலில் மூலவர் சன்னதி எதிரே உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பட்டு வஸ்திரம் மற்றும் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பிலவ ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பிக்கப்பட்டது.

யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவல் தடுக்க கோயிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 300 சிறப்பு தரிசனம் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். யுகாதியையொட்டி ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  7  டன் மலர்கள் மற்றும் பழங்களால் கோயில் வளாகம் மற்றும் வெளியே அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Related Stories: