பேட்டிங்கில் சொதப்பியது கேகேஆர்..! மும்பைக்கு முதல் வெற்றி

சென்னை: நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீசியது. மும்பை அணியில் கிறிஸ் லின் நீக்கப்பட்டு டி காக் இடம் பெற்றார். கேப்டன் ரோகித் , டி காக் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். டி காக் 2 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து ரோகித்துடன் சூரியகுமார் இணைந்தார். அனுபவ சுழல் ஹர்பஜன் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய சூரியகுமார், பிரசித் வீசிய 8வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்டினார்.

33 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்த சூரியகுமார், 56 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷாகிப் பந்துவீச்சில் கில் வசம் பிடிபட்டார். ரோகித் - சூரியகுமார் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தனர். அடுத்து வந்த இஷான் 1 ரன்னில் வெளியேற, ரோகித் 43 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஹர்திக் 15 ரன் எடுத்து பிரசித் வேகத்தில் ரஸ்ஸல் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் போலார்டு 5 ரன், ஜான்சென் (0), க்ருணல் 15 ரன், பூம்ரா (0) ஆகியோர் ரஸ்ஸல் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். கடைசி பந்தில் ராகுல் சாஹர் (8 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை 20 ஓவரில் 152 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

போல்ட் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ரஸ்ஸல் 2 ஓவரில் 15 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கம்மின்ஸ் 2, வருண், ஷாகிப், பிரசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மும்பை அணி 35 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. நிதிஷ் ராணா அதிகபட்சமாக 57 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஷூப்மான் கில் 33 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 4, டிரென்ட் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு சாம்பியன் மும்பை அணி முதல் வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றது.

Related Stories:

>