×

காஞ்சிபுரம் வழக்கறிஞர் படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் அழகரசன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பார் அசோசியேஷன் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை வக்கீல் எழிலரசன், தனது நண்பர் சங்கர் என்பவருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் வக்கீல் அழகரசனை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற நண்பரும் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த உடலை வாங்க மறுத்து, வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் 1 மணிவரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், போலீசார் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர். பின்னர், எஸ்பி சண்முகப்பிரியா, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். மாலை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு வக்கீல் அழகரசன் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.  இதனால் காஞ்சிபுரத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Kanchipuram , Kanchipuram lawyer slams relatives for refusing to buy murdered body
× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட...