திமுக பிரமுகர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவானவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைபாக்கம் ஊராட்சி, பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). பிள்ளைபாக்கம் ஊராட்சி திமுக செயலாளர். ரியல் எஸ்டேட், தனியார் கம்பெனியில் ஸ்கிராப் எடுக்கும் தொழில், கட்டுமான பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த 2019 பிப்ரவரி 11ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலை பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் ரமேஷ் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோ மற்றும் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10 பேர், அலுவலகத்துக்குள் நுழைந்து, ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், முக்கிய குற்றவாளியான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வேலாகுடி பகுதியை சேர்ந்த ரட்சகன் (எ) ராஜிவ் (23) என்பவரை  தனிப்படை அமைத்து கடந்த 2 ஆண்டாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில்,  கும்பகோணம் பகுதியில் ரட்சகன் பதுங்கி இருபதாக தனிப்படை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் அங்கு சென்று, ரட்சகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், நேற்று ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அவரை, ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: