டெல்லியில் 24 மணிநேரத்தில் 13,500 பேருக்கு தொற்று உறுதி: பொதுத்தேர்வை ரத்து வேண்டும்..! மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 13,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், 10 மற்றும் 12ம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் உள்ளிட்ட சாத்தியமான மாற்று வழிகளில் நடத்த முன்வர வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாளின் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 13,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த நோய் பாதிப்பு 7,36,788 ஆக உயர்ந்தது. அதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த திங்களன்று 1.68 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதுவே நாட்டில் ஒருநாளின் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக பதிவானது. இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.36 கோடியாக உயர்த்தது.

டெல்லியில் நேற்று முன்தினம் 10000க்கும் அதிமாகவும், அதற்கு முந்தைய நாளில் 11,000 க்கும் அதிகமான எண்ணிக்கையிலும் பாதிப்பு பதிவானது. தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு 14 தனியார் மருத்துவமனைகளை முழுமையான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளதாக நேற்று முன்தினம் ஆம் ஆத்மி அரசு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று ஒரே நாளில் 13,500 க்கும் அதிகமான எண்ணிக்கையில் நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரி்க்கை விடுத்தார். இதுபற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 13,500 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மூன்றாம் அலை வீசிய நேரத்தில் ஒருநாளின் அதிகபட்ச பாதிப்பு 8,500 ஆக மட்டுமே இருந்தது.

ஆனால், தற்போதைய நான்காம் அலை மிகவும் தீவிரத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனால பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நான்காம் அலையில் அதிகமாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். தேர்வுகளை ஆன்லைன் உள்ளிட்ட மாற்று வழிகளில் நடத்துவதை பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்கலாம். ஏனெனில், பிற நாடுகளில் இதை நிறைவேற்றி உள்ளனர். இந்தியாலும் கூட சில மாநிலங்களில் இதை செய்துள்ளனர். டெல்லியில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பொது தேர்வை எழுத உள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள். எனவே, பொதுத்தேர்வை நடத்தினால் தொற்று பாதிப்பு அதிக அளவில் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்.  எனவே, தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

டெல்லியில் தொற்று பாதிப்பின் நான்காம் அலை அதி தீவிரத்தன்மையுடன் உள்ளதால், நிலைமையை சமாளிக்க 80 மருத்துவமனைகளில் உள்ள 60 சதவீத ஐசியு படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கி முன்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி மருத்துவமனைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடுமையான பாதிப்புகள் இல்லாத நிலையில் வருவோரை அனுமதிக்க வேண்டாம். அரசு எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவதை டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. டெல்லியின் கொரோனா பாதிப்பு கிராப் மும்பைக்கு இணையாக உள்ளது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் மிகக் குறைவான சப்ளை இருப்பதால், அரசு அண்டை மாநிலங்களில் உதவி கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: