×

45 நாள் பொறுமை காக்க வேண்டியது அவசியமா? தடுப்பூசி போட்டதும் மது குடிக்கலாமா? ‘குடி’மகன்களின் பெரும் சந்தேகத்துக்கு விடை கிடைச்சாச்சு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு மது குடிக்கலாமா என்பது மதுப்பிரியர்களின் பலத்த சந்தேகமாக இருந்து வருகிறது. இந்த சந்தேகத்திற்கு சரியான விடை கிடைக்காததால், பெரும்பாலான மது பிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூட தயங்குகின்றனர். இவர்களின் சந்தேகத்தை பிரபல டாக்டர்கள் தீர்த்து வைத்துள்ளனர். கொரோனா 2வது அலை தீயாக பரவி பலரையும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி, தகுதியான நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள பலர் ஆர்வம் காட்டினாலும், மதுப்பிரியர்கள் மத்தியில் மட்டும் லேசான தயக்கம் இருந்து வருகிறது.

ஏனெனில், கொரோனா தடுப்பூசி போட்டால், நோயெதிர்ப்பு சக்தி உருவாக 45 நாட்கள் மது குடிக்காமல் இருக்க வேண்டும் என்ற செவி வழிச் செய்திகள்தான். இதை மீறினால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் மிரட்டலான சில எச்சரிக்கைகள் வருவதால், குடிக்க முடியாதே என்பதற்காகவே மதுப்பிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள். உண்மையிலேயே, தடுப்பூசி போட்டுக் கொண்டால் மது குடிக்கக் கூடாது என தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளதா அல்லது மது குடிக்கலாமா, அதனால் எந்த பிரச்னை வருமா என்பது குறித்து பிரபல டாக்டர்களே விளக்கம் அளித்துள்ளனர்.

இதோ டாக்டர்களின் பதில்கள்: மும்பையை சேர்ந்த டாக்டர் பிபின் ஜிப்காதே கூறுகையில், ‘‘ஆன்டிபாடிகளின் உற்பத்தியுடன் ஆல்கஹாலுக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. தடுப்பூசி போட்ட பிறகு ஆன்டிபாடிகள் உருவாக 3 வாரங்கள் ஆகும். எனவே அந்த சமயத்தில் மது குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்ப்பு சக்தி உருவாக அதிக நேரமெடுக்கும். தடுப்பூசி போட்ட பிறகு மது அருந்தாமல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருப்பதை உறுதி செய்யும். பொதுவாக மது குடிப்பது உடல் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். மனநலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது’’ என்றார். புனேவைச் சேர்ந்த டாக்டர் மகேஷ் குமார் லாகே கூறுகையில், ‘‘எந்த நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் தனது கொரோனா தடுப்பூசி வழிகாட்டுதல்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

தடுப்பூசி உற்பத்தியாளர்களில் பைசர், மாடர்னா, அஸ்ட்ரஜெனிகா போன்றவை தங்கள் வழிகாட்டுதல்களில் மது அருந்துவதை ஒரு முரண்பாடாக குறிப்பிடவில்லை. ஸ்பூட்னிக் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே ரஷ்யாவில் மதுவை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளனர். ஆல்கஹால் நோய் எதிர்ப்பு மண்டல கட்டமைப்பை பாதிக்கிறது என்பதற்கான போதுமான ஆதரங்களை சேகரிக்க இன்னும் அதிகமான அறிவியல் ஆய்வுகள் தேவை. அதே சமயம், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் 45 நாட்களுக்கு ஆல்கஹால் தவிர்ப்பதே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ச்சிக்கு நல்லது’’ என்றார். எனவே, கொலைகார கொரோனாவிடமிருந்து தப்பிக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டதும் மதுவுக்கு சற்று காலம் ‘குட்பை’ சொல்வதே நல்லது.

Tags : Is it necessary to have 45 days of patience? Can I drink alcohol after vaccination? The answer to the great doubt of the ‘drinking’ sons
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்