×

வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே தொழிலாளி பலி: தனியார் தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே தொழிலாளி பலியானார். இதைதொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு  நிவாரணம் கேட்டு தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். திருப்போரூர் அருகே ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமம், கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (43). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 16 மற்றும் 14 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கண்ணனுக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆலத்தூர் சிட்கோ மருந்து தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் கண்ணன், கூலி வேலைக்கு சென்றார்.

மாலை 4.30 மணியளவில் தொழிற்சாலை வளாகத்தில் தேநீர் அருந்தினார். அப்போது அவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள், அவரை மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து  திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், கண்ணனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு, போலீசில் புகார் கொடுக்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து கண்ணனின் உறவினர்களும், நண்பர்களும் நேற்று மதியம், அவர் வேலை  செய்த தொழிற்சாலை வளாகம் முன்பு திரண்டு, அவரது இறப்புக்கு நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர்.

இதற்கு தொழிற்சாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. மேலும், ஒரு நாள் வேலைக்கு வந்தற்காக நிவாரணம் வழங்க முடியாது என கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் நிவாரணம் வழங்காவிட்டால் சடலத்தை, வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து, திருப்போரூர் போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம், சிஐடியூ ஒன்றிய செயலாளர் பகத்சிங் தாஸ் ஆகியோர் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தொழிற்சாலை தரப்பில் நிவாரண தொகை தருவதாக உறுதி அளித்தன். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Worker killed on first day of work: Relatives besiege private factory
× RELATED காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சித்த...