அண்ணனை கொன்றதுக்கு பழிக்கு பழி கஞ்சா விற்ற பெண் சரமாரி வெட்டி படுகொலை: 5 சகோதரர்கள் வெறிச்செயல்; கூட இருந்து குழிபறித்த கணவன்

சென்னை: தன் அண்ணனை கொலை செய்த மனைவியை, கணவன் மற்றும் அவரது 5 சகோதரர்கள் புளியந்தோப்பில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். சென்னை புளியந்தோப்பு குருசாமி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் புஷ்பா. இவர் அதே பகுதியில் கள்ள மார்க்கெட்டில் கஞ்சா, மது மற்றும் மாவா விற்றுவந்தார். இவரது மகள் சுப்ரியா (32), இவருக்கு ரூபன் என்ற நபருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுப்ரியாவும் அதே தொழிலை செய்து வந்தார்.  

இதனால், சுப்ரியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 மாதங்களுக்கு முன் பிரிந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ரூபனின் அண்ணன் ராம்குமார் மற்றும் தம்பிகள் சுதாகர், பிரேம்குமார், தினகரன் உள்ளிட்டோர் சுப்ரியாவின் வீட்டிற்கு வந்து, “உங்களிடம் பேச வேண்டும்,” என்று கூறி சுப்ரியாவை குருசாமி நகர் 9வது தெரு பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்ரியாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக வெட்டியுள்ளனர். சுப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக சுப்ரியாவை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில் பேசின்பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுப்ரியாவின் கணவர் ரூபனின் அண்ணன் ரமேஷ் (எ) நாய் ரமேஷ் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு 9ம் மாதம் புளியந்தோப்பு பகுதியில் வைத்து மர்ம கும்பல் வெட்டி கொன்றது. இதற்கு மூளையாக செயல்பட்டவர் சுப்ரியா என கூறப்படுகிறது. மேலும், இந்த கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட சுப்ரியா சாட்சி சொல்ல செல்லவில்லை.

இதனால் அவர் மீது கணவர், அவரது அண்ணன், தம்பிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இதனால் சுப்ரியாவை கொலை செய்ய வேண்டும் என கடந்த பல மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் அதை அரங்கேற்றியுள்ளனர். மேலும்  ரூபனின் அண்ணன் ராம்குமார், தம்பிகள் சுதாகர், பிரேம்குமார், தினகரன் மற்றும் சஞ்சய், டேவிட், கோதண்டன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் சுப்ரியாவின் கணவர் ரூபன் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் சொந்தக்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் சுப்ரியாவின் கணவர் ரூபன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

* மாமூல் போலீசாரால் வந்த விணை

புளியந்தோப்பு குருசாமி நகர் பகுதியில் சுப்ரியா மற்றும் அவரது தாய் புஷ்பா ஆகியோர் பல வருடங்களாக கள்ளச்சந்தையில் கஞ்சா, மதுபானம் மற்றும் மாவா விற்று வருகின்றனர். இது பேசின்பிரிட்ஜ் போலீசாருக்கு நன்கு தெரிந்திருந்தும் கண்துடைப்புக்காக மாதம் இரண்டு வழக்கு என போட்டு விட்டு மாதம் ரூ.50,000 வரை மாமூல் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பலதடவை இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே சென்ற ஆண்டு ஒரு கொலை நடந்த நிலையில் தற்போது சுப்ரியாவும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: