×

டெல்லிக்கு பயந்து எம்ஜிஆர் வைத்த பெயரை மாற்றும் அதிமுக ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாறாவிட்டால் மே 2ம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ ஆணை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையின் முக்கிய சாலைக்கு மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என பெயர் மாற்றாவிட்டால் மே 2ம்தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்ட போதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அதிமுகவின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா? எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள். அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்து, ஆதிக்கத்துக்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Tamil Nadu government , Official order after May 2 if AIADMK does not change the name of MGR to EVR Highway for fear of Delhi: MK Stalin condemns Tamil Nadu government
× RELATED மே 2ம் தேதி திமுக வெற்றியடைந்த...