×

தமிழகம் முழுவதும் கொள்முதல் நிலையத்தில் 4லட்சம் டன் நெல் தேக்கம்

திருவாரூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் இளவரி வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத்துறை நிறுவனமான நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடந்து வருகிறது. இதில், தமிழகம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் தேங்கி கிடக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது ஒருபுறமும், வெயிலில் காய்ந்து எடை குறைவாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 32 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட போது நெல் சேமிப்பு மையம் திறப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிர்வாகம் அதை செய்யாமல் மெத்தன போக்காக செயல்பட்டது இதற்கு காரணம். தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கேற்ப போதுமான அளவில் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 10,000 நெல் மூட்டைகள் நனைந்தது: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அரசர்குளம் கீழ்பாதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10ஆயிரம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் மூட்டைகள் நனைந்து நெல்மணி முளைக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu , 4 lakh tonnes of paddy in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...