இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

* திருப்பி அனுப்பி வைத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்

* சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியிலும் இருப்பு இல்லை

திருச்சி: தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 நாட்களுக்கு முன்பு, முதல் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசியை 90 பேர் போட்டுக் கொண்டனர். இதில் 70க்கும் அதிகமானவர்கள் இரண்டாம் கட்டத்தடுப்பூசி போடுவதற்காக நேற்று வந்தனர். இவர்களில் 20 பேருக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இருந்தது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தொடக்கத்தில் கோவாக்சின் குறித்து மக்களிடையே தயக்கம் நிலவியதால், தமிழகத்தில் இந்த தடுப்பூசி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 6 மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியை ஏராளமானோர் போட்டுக் கொண்டதால் கோவாக்சின் தீர்ந்து விட்டதற்கு காரணம் என்றும், விரைவில் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு போடப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையிலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2ஊசிகளுமே இருப்பு இல்லாததால் 11ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் தடுப்பூசி போட வரும் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தடுப்பூசி போட வருபவர்களை திருப்பி அனுப்பி வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் தடுப்பூசிபோட்டுக்கொள்ள படையெடுக்கத் துவங்கியுள்ளனர். ஆனால், அனைவருக்கும் தடுப்பூசி போட முடியவில்லை. 2 நாள் கழித்து போடப்படும் என பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மதுரையில், பழங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடச் சென்ற பெண்களை ஊசி பற்றாக்குறை இருப்பதாகக் கூறி நேற்று திருப்பி அனுப்பினர். மதுரை தனியார் மருத்துவமனைகளிலும் ரூ.250 கட்டணத்தில் போடும் தடுப்பூசிக்கும், சில இடங்களில் கையிருப்பு ஊசி மருந்து இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதுதவிர, ராமநாதபுரம் நகர், புறநகரிலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் ஊசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories: