உரம் விலை உயர்வை கண்டித்து காலி சாக்குடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

பட்டுக்கோட்டை: உரம் விலையை உற்பத்தி நிறுவனங்களே எவ்வித கட்டுப்பாடுமின்றி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த முடிவால் உற்பத்தி நிறுவனங்கள் 60 சதவீதத்துக்கு உரங்களின் விலையை உயர்த்தி விட்டன. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உரம் விலை நிர்ணயத்தை தனியாருக்கு மத்திய அரசு வழங்கியதை கண்டித்தும், விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கக்கோரியும் டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் காலி உரச்சாக்குகளை தங்களது கைகளில் பிடித்தவாறு வயலுக்குள் நேற்று இறங்கி நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, உரவிலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளத்தில் விவசாயிகள், அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஒப்பாரி வைத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஏற்றாதே ஏற்றாதே உர விலையை ஏற்றாதே என ஒப்பாரி வைத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது. விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தேவையான இயந்திரங்களின் விலைகளும் உயர்ந்துவிட்டது. தற்போது உர விலையும் ஏறிவிட்டதால், தனியார் விற்பனை நிலையங்கள் விலை நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த உர விலை உயர்வினால் கூலி வேலைக்கு தொழிலாளர்களை எப்படி அழைப்பார்கள்? இதனால் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: