மின்னணு இயந்திரங்களை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற விவகாரம்: சென்னை வேளச்சேரி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17-ம் தேதி மறு வாக்குப்பதிவு.!!!

சென்னை: சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே, சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் வாக்குப் பதிவு முடிந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் தூக்கிச் சென்றனர்.

வாக்குப்பதிவு மையத்தில் இருந்து மின்னணு இயந்திரங்களை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற விவகாரம் விஸ்வரூபமானது. அந்த வாக்கு பதிவு இயந்திரம் 50 நிமிடங்கள் வாக்குகள் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளன. வேளச்சேரியில் நடந்த சம்பவம் குறித்து அந்த வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றிய அதிகாரிகள் விவரமாக அறிக்கை கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளரும் அறிக்கை கொடுத்துள்ளனர். இவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம்தான் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா, இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தொடர்ந்து, வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் எண் 92வது வாக்குச்சாவடியில் வரும் ஏப்ரல் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: