நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் வந்து பெண்களிடம் செயின் பறிக்கும் மர்ம ஆசாமிகள்: கண்டு கொள்ளாத காவல்துறை; பொதுமக்கள் குற்றச்சாட்டு

வேலூர்: நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் வந்து பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காவல்துறையும், வட்டார போக்குவரத்துத்துறையுமே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை பைக்குகளில் வரும் ஆசாமிகள் வழிமறித்து செயினை பறித்து செல்கின்றனர். கடந்த 9ம் தேதி வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மனைவி பாரதி(57) சாலையில் சென்றபோது, அவ்வழியாக கருப்பு நிற பைக்கில், ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் பாரதி கழுத்தில் கிடந்த 8 சவரன் செயினை பறித்து சென்றார்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு அதே பகுதி பூந்தோட்டம் குடியிருப்பில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக் ஆசாமி செயினை பறித்து சென்ற சம்பவம் நடந்தது. இதுதவிர காட்பாடி காந்தி நகர், திருநகர், தொரப்பாடி, சத்துவாச்சாரி, ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை என பல இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ரோட்டில் நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பு தவிர, செல்போன், பர்சை பறித்து செல்வது போன்ற குற்றச்சம்பவங்களும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. வேலூர் நகரை பொறுத்தவரை குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஏற்கனவே பல வழக்குகளில் வாகனங்களின் எண்ணை வைத்து அது யாருடைய பைக் என்பதும், திருடப்பட்ட பைக் என்பதும் தெரிய வரும்.

ஆனால் தற்போது, நம்பர் பிளேட் இல்லாத புதிய பைக்கை பயன்படுத்தி செயின் பறிப்பு, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது. காரணம் அந்த பைக்கின் சேஸ் எண்ணை வைத்தும் அந்த பைக்கின் உற்பத்தி தொடங்கி பிற விவரங்களை அறிய முடியும். இவ்விஷயத்தில் காவல்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் சாலைகளில் ஓடிக் கொண்டிருப்பதை கண்காணிக்க ேவண்டிய வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளையும் குற்றம்சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

எனவே, செல்போன் பறிப்பு உட்பட வழிப்பறி சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்கு முதலில் சாலைகளின் ஓடும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். ஷோரூம்களில் இருந்து வாங்கப்படும் பைக்குகளுக்கு விரைந்து ஆர்சி புத்தகத்தை வழங்க வேண்டும். நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் மீது இருதுறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல நடவடிக்கைகளுடன், வழிப்பறி சம்பவங்கள் குறித்து கொடுக்கப்படும் புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து விசாரணை நடத்தினாலே குற்றங்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: