ஃபுட் ஸ்டைலிங் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

நம்பிக்கை அதானே எல்லாம் என்பது போல், இன்றைய உலகில் விளம்பரமே எல்லாம் என்றாகி விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரையும் கவர்ந்து தேவையான பொருட்கள் முதல் தேவையற்ற பொருட்கள் வரை நம்மை வாங்க வைப்பவை விளம்பரங்கள் தான்.  கவர்ச்சியான இந்த விளம்பர உலகம் சாப்பாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஒரு ஹோட்டலுக்குப் போய் உட்காருகிறோம்.

அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் அழகான உணவின் புகைப்படம் நம்மை கவருகிறது. அந்த உணவை வாங்கி சாப்பிட நம்மை தூண்டுகிறது.  உணவு விளம்பரங்களை பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை ஃபுட் போட்டோகிராபி மற்றும் ஃபுட் ஸ்டைலிங். ஆவி பறக்கும் இட்லி மற்றும் தேன்  ஒழுகும் பேன்கேக் பின்னணியில் உள்ள சீக்ரெட்ஸ் பற்றி நம்மிடையே விளக்குகிறார் ரெசிபி கன்சல்டன்ட் விஜி ராம்.

“உலகம் முழுதும் இன்றைக்கு வளர்ந்து வரும் பல்வேறு தொழில்களில்சிறப்பான எதிர்காலம் இருப்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில்களுக்குதான்.  ஹோட்டல் மேனேஜ்மென்ட், ரெடிமேட் உணவுகள், தட்டுகள் முதல் கிண்ணங்கள் வரை பரிமாறும் முறை, மேஜை விரிப்பு அலங்காரங்கள் மற்றும்  உணவு பரிமாறும் முறை குறித்த படிப்புகள் என்று ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் உணவு குறித்த விளம்பரத்துறையும் பெருவளர்ச்சியில்  பயணிக்கிறது.

ஏராளமான உணவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் இணையதளங்களில் கண்ணைக்கவரும் புகைப்படங்களை, பார்த்தாலே சாப்பிடத் தூண்டும்  உணர்வை ஏற்படுத்துவது நமக்கு ஒரு விஷுவல் ட்ரீட்தான். நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரமோ, பத்திரிகை விளம்பரமோ சட்டென்று  உங்களை ஈர்க்கும். அந்த உணவு வைத்திருக்கும் பாத்திரம், அருகில் இருக்கும் கரண்டி, மற்ற பொருட்கள், சூடோ சுவையோ அதிலிருந்து வரும்  ஆவியோ குளிர்ந்த ஐஸ்கட்டியோ அந்த உணவு சொல்ல வரும் விசயத்தை அத்தனை அழகாக நமக்கு உணர்த்தும்.

நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இப்படி உணவினை பரிமாறவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும். இன்றைய சோஷியல் மீடியா காலத்தில் நாம்  சாப்பிடும் உணவை உடனுக்குடன் புகைப்படமெடுத்து பகிருகிறோம். சிலர் அதனை தொழிலாகவும் செய்கிறார்கள். பத்திரிகைகள், வலைத்தளங்கள் யு  ட்யூப் (You tube) சேனல்கள் என்று எங்கும் நிறைந்திருக்கும் இந்த ஃபுட் போட்டோகிராபி மற்றும் ஃபுட் ஸ்டைலிங் பற்றி கொஞ்சம் விவரமாக  தெரிந்துகொள்வோம்.

ஃபுட் போட்டோகிராபி

சிறியதே அழகு, சிறிய அளவிலான உணவுகள் புகைப்படத்தில் நன்றாக இருக்கும். உணவின் டெக்ஸர், கன்ஸிஸ் டென்சி மிகச்சரியாக தெரியும். பாதி  சமைத்த அல்லது சமைக்காத உணவுகளும் புகைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும். உதாரணம் முழு கோழிகள், அவைகளுக்கு உள்ளே பஞ்சு  உருண்டைகள் அடைத்து, மேலே ப்ரவுன் வண்ணம் பூசி கிச்சன் டார்ச் அல்லது ப்ளோ டார்ச்சினால் லேசாக கருக்கி இறுதி வடிவம் தருவார்கள்.

 

வெள்ளை தட்டுகள், கப், ஸ்பூன் போன்றவை அநேக உணவுகளுக்கு பொருந்தும். உணவு வெள்ளையாக இருக்கும் பட்சத்தில் பின்னணியைப் பொறுத்து  முடிவு செய்யலாம். முடிந்த வரை இயற்கையான வெளிச்சத்தில், உணவுக்கு கான்ட்ராஸ்டாக பாத்திரங்கள் மற்றும் மற்ற பொருட்களையும்  உபயோகிக்கவேண்டும். ப்ராப்பர்டீஸ் எனப்படும்  இவைகள் தான் புகைப்படத்தை அழகாக்குவது. பழையதோ புதியதோ அதை உபயோகிக்கும் விதம்  தெரிந்தால் புகைப்படம் அழகாகும்.

ஃபுட் ஸ்டைலிங்

பார்த்தாலே சாப்பிடத் தூண்டும் ஐஸ்க்ரீம், சிக்கன் கபாப், மீன் வறுவல் மற்றும் அனைத்து உணவுப்  பொருட்களும் ஒரு ஃபுட் ஸ்டைலிஸ்ட்  மூலம்   அலங்கரிப்பட்ட  பிறகே  புகைப்பட மேஜையை அடையும். உலகம் முழுதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஃபுட் ஸ்டைலிங்  டெக்னிக்ஸ்  உங்களுக்காக…

1. வறுக்கப்பட்ட முழு கோழி மேலே எண்ணை பளபளவென்று மின்னுவதை புகைப்படங்களில் பார்த்து இருப்போம். பிரவுன் நிற எண்ணையின்  பளபளப்பு வேறு எதுவும் இல்லை, நாம் ஷூக்களில் பயன்படுத்தும் பாலிஷ் அல்லது பிரவுன் நிற பெயின்ட். இதை கொண்டு முதலில் பெயின்ட்  செய்து அதன் மேல் ப்ளோ டார்ச்சினை லேசாக காண்பிக்கும் போது அது கருகியது போல் அழகாக புகைப்படத்தில் தெரியும்.

2. கிரில்டு சிக்கனில் வரிகள் சீராக அமைய பெயின்ட் மற்றும் சூடான கிரில் கம்பியால் அழுத்துவார்கள்.

3. ஸ்ட்ராபெர்ரி  உள்பட மற்ற பழங்களை லிப்ஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் எனாமல் கொண்டு மினுமினுக்க செய்யலாம்.

4. பர்கர் போன்றவைகளை படமெடுக்கும் போது சீஸ் ஸ்லைஸஸை தண்ணீரில் மூழ்க வைத்து, ப்ரீசரில் இருந்து எடுக்கப்படும் பர்கருக்கு நடுவில்  வைத்து படமெடுக்கும் போது சரியான உருகும் பதத்தை தரும்.

5. ஐஸ்க்ரீம் – பெரும்பாலும் கேக் மிக்ஸ் அல்லது பவுடர் சுகரின் கலவையே.

6. திக்கான பால் என்பது பெவிகால் போன்ற பசை.

7. மேபிள் சிரப், எஞ்சின் ஆயில்கள் மற்றும் அதன் கலர் சார்ந்தவை.

8. சமைக்கப்படாத மீன் மற்றும் அசைவ உணவுகளை ப்ரெஷ்ஷாக காட்ட வைப்பது க்ளிசரின் குளியல் தான்.

9. சின்னச் சின்ன பஞ்சு உருண்டை களை மைக்ரோவேவில் வைத்து பின் உணவு தட்டில் வைத்தால் ஆவி பறக்கும் இட்லி ரெடி.

10. டியோடரன்ட், ஹேர் ஸ்ப்ரே போன்றவை ப்ரெட், கேக் போன்றவற்றை காய்ந்து

போகாமல் பாதுகாத்து வைக்கும்

11. பர்கரின் மேல் அழகாக தூவவிடப்பட்டு இருக்கும் எள், பசைக் கொண்டு ஒட்டவைக்கப்படும்.

12. அட்டைகள், பேப்பர், டவல் போன்றவைதான் சாண்ட்விச்.

13. படத்தில் நாம் பார்க்கும் உருகும் வெண்ணெய்கள் சூடான உணவின் மேல் வைக்கப்படுவதில்லை, மாறாக ப்ரீசரில் வைத்த உணவின் மேல்  வைக்கப்படும் போது வெண்ணெய் மெதுவாக வழிந்து உருகும்.

16. அழகான ஜூஸ்கள் பெரும்பாலும் வண்ணக்கலவைகள் தான்.

17. ஃபுட் ப்ளேவர்ஸ், ப்ரூட் ப்ரெஷ், ஃபுட் ஸ்ப்ரே என்று மார்க்கெட்டில் நிறைய கிடைக்கிறது. இவையெல்லாம் புகைப்படத்தை அழகாக்க மட்டுமே.  என்னதான் நன்றாக  சமைத்தாலும்

நாம் அதை புகைப்படம் எடுக்கும் போது பார்க்க விஷுவல் டிரீட் போல அமையாது. அதற்காக தான் இந்த யுக்திகளை ஃபுட் ஸ்டைலிஸ்ட்கள்

கடைப்பிடிக்கிறார்கள். இந்த டிரிக் புகைப்படம் எடுக்கவும், உணவினை சாப்பிட தூண்டவும் தான். அழகு படுத்தப்படும் உணவுகளை சாப்பிட முடியாது”  என்றார் விஜி ராம்.        

­ஸ்ரீதேவி மோகன்

Related Stories: