சித்திரை திருநாளில் அலுவலகம் திறக்க வேண்டும்: மங்களகரமான நாட்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்க பதிவுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி.!!!

சென்னை: மங்களகரமான நாட்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்க பதிவுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2018 பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டு வருகிது. ஆரம்பத்தில் பத்திரப்பதிவுகளில் இடர்பாடுகள் இருந்தாலும், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, தற்போது ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பத்திரப்பதிவில் புதிய இலக்கை  பதிவுத்துறை எட்டி வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஜனவரி 25-ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திர பதிவு 20 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, காலை 9 மணி முதல் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரவும் அலுவலர்கள்  அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்தப்படி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர்.

தொடர்ந்து, பதிவுக்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பாமல் இரவு வரை பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே திருப்பி அளிக்கப்பட்டது. அதன்பேரில், இதுவரை பத்திரப்பதிவு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி மட்டும் 22,686 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் 138.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவருக்கு பத்திரப்பதிவு துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சுபமுகூர்த்த தினம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வரவுள்ள  மங்களகரமான நாட்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>