மாணவர்களின் உயிர் முக்கியம்… சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க :டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி: கொரோனா அச்சுறுத்தி வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,50,000-ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிவேகமாக சென்று வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டுமென அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் தேர்வு எழுதப்போகும் 6 லட்சம் பிள்ளைகளின் உயிரும் உடல் நலனும் மிக முக்கியம். ஒரு லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்பார்கள் என்பதால் கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. தேர்வுகளுக்கு பதிலாக சில மாற்று முறைகள் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஆன்லைன் முறை அல்லது உள் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முறை மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற வைக்கலாம். கொரோனா 2வது அலை மிகவும் ஆபத்தானது. என்னிடம் உள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 13, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10-15 நாட்களில் 65% 45க்கும் மேற்பட்டவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமும், வாழ்க்கையும் முடியும். ஆதலால் மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: