பாபர் மசூதி வழக்கில் 32 பேரை விடுதலை செய்த நீதிபதிக்கு லோக் ஆயுக்தாவில் துணை தலைவர் பதவி!!

லக்னோ : பாபர் மசூதி வழக்கில் 32 பேரை விடுதலை செய்த நீதிபதி உத்தரப் பிரதேச மாநில லோக் ஆயுக்தாவில் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ந் தேதி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டியது, மசூதி இடிப்பிற்கு தூண்டுதலாக இருந்தது என பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதுஇதில் 17 பேர் உயிரிழந்து விட்ட நிலையில், எஞ்சிய 32 பேர் மீதான விசாரணை தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேந்திர யாதவ், ஆதாரங்களில் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில லோக் ஆயுக்தாவில் துணை தலைவராக (Deputy Lokayukta III - 3ஆவது துணைத் தலைவர்) நீதிபதி சுரேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பல்வேறு அரசு அதிகாரிகள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் அந்த பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: