ராகுல் 91, ஹூடா 64, கேல் 40 ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

மும்பை, ஏப். 13: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 14 ரன் எடுத்து அறிமுக வேகம் சேத்தன் சகாரியா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சன் வசம் பிடிபட்டார். அடுத்து ராகுலுடன் அதிரடி வீரர் கிறிஸ் கேல் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது.

ஐபிஎல் போட்டிகளில் 350 சிக்சர் என்ற சாதனை மைல்கல்லை எட்டி அசத்திய கேல் 40 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பராக் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து உள்ளே வந்த தீபக் ஹூடா எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற, ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

பொறுப்புடன் விளையாடிய ராகுல் 30 பந்தில் அரை சதம் கடந்தார். துபே வீசிய 13வது ஓவரிலும், கோபால் வீசிய 14வது ஓவரிலும் தலா 3 சிக்சர்கள் பறக்க, அந்த 2 ஓவரில் மட்டும் பஞ்சாப் அணிக்கு 40 ரன் சேர்ந்தது. சிக்சர்களாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்திய ஹூடா 20 பந்தில் அரை சதம் அடித்து மிரட்டினார். சகாரியா வீசிய 17வது ஓவரில் ஹூடா ஹாட்ரிக் பவுண்டரியும் அடித்தார். ராகுல் - ஹூடா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது. ஹூடா 64 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி மோரிஸ் பந்துவீச்சில் பராக் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த நிகோலஸ் பூரன் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ராகுல் 91 ரன் (50 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி சகாரியா வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் திவாதியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜை ரிச்சர்ட்சன் டக் அவுட்டாக, பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. ஷாருக் கான் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராயல்ஸ் பந்துவீச்சில் சகாரியா 3, மோரிஸ் 2, பராக் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 119 ரன் (63 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். ஜாஸ் பட்லர் 25 ரன், ரியான் பராக் 25 ரன் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட், முகமது சமீர் 2 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் 2 புள்ளிகள் பெற்றது.

Related Stories: