நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோடை வெப்பத்தால் 15 லட்சம் கோழிகள் சாவு: முட்டை விலை தொடர்ந்து உயர்வு

நாமக்கல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கடும் வெப்பத்தால், 15லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த மார்ச் 29ம் தேதி ஒரு முட்டை விலை 390 காசாக இருந்தது. அதன் பின்னர், தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், முட்டை விலை நிர்ணயம் செய்யும் என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டை விலையில் மேலும் 15 காசுகள் உயர்த்தியுள்ளார். இதனால் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 445 காசில் இருந்து 460 காசாக உயர்ந்துள்ளது. முட்டை விலை தொடர் உயர்வுக்கான காரணம் குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது: கடுமையான வெப்பத்தால், நாமக்கல் பண்ணைகளில் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்துவிட்டன.

95 முதல் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தான் கோழிகள் தாங்கும். கடந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக, நாமக்கல் பகுதியில் 105 டிகிரிக்கு மேல் வெப்பம் வீசியது. இதை தாக்குப்பிடிக்க முடியாமல் கூண்டுகளிலேயே கோழிகள் இறந்துவிட்டன. கோழித்தீவன மூலப்பொருளான சோயாபுண்ணாக்கு, ஒரு கிலோ 35ஆக இருந்தது. இது தற்போது 65ஆக உயர்ந்துள்ளது. இதனால் புதிய குஞ்சுகளை பண்ணைகளில் விடுவதும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, பண்ணைகளில் சுமார் 1 கோடி முட்டை உற்பத்தி குறைந்து, முட்டைக்கு டிமாண்ட் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரும் வாரங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories: