ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர் பணி நியமனங்களில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் விடுவிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் மாநில அரசுக்கு தலைமைச் செயலாளர் மூலம் பரிந்துரை செய்துள்ளார். இந்த ஒன்பது அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கையை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கட்டாய ஓய்வில் பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாது, ஊழல் முறைகேடுகள் சம்பந்தமான சிவில், கிரிமினல் பிரிவுகளில், இந்திய குற்றப்பிரிவு சட்டங்களின்படி உரிய வழக்குகள் தொடரப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: