விளக்கம் திருப்தி அளிக்கவில்லை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை...தேர்தல் ஆணையம் நடவடிக்கை.!!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த மார்ச் 27ம் தேதி  முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி 30  தொகுதிகளுக்கும், 6ம் தேதி  31 தொகுதிகளுக்கும் முறையே 2வது, 3வது,4வது கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த  தலைவர்கள் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மாநிலத்தில் 10 ஆண்டுகள்  ஆட்சி செய்து வரும் திராணமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆட்சியை தக்க வைக்க  தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 7,8ம் தேதிகளில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமுறைகளை மீறி முதல்வர் மம்தா, மத்திய  பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு முன்பு மம்தாவிற்கு தேர்தல் ஆணையம் 2 முறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மம்தா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று  இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை அமலில்  இருக்கும் கால கட்டத்தில் இது போன்ற பகிரங்கமான பேசுவதை மம்தா தவிர்க்க வேண்டும் தேர்தல் ஆணையம்  எச்சரித்துள்ளது.

Related Stories: