திருச்செந்தூரில் நோய் பரவும் அபாயம்: தூண்டிகை விநாயகர் கோயிலை சுற்றிலும் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தூண்டிகை விநாயகர் கோயிலை சுற்றிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவல் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தூண்டிகை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தேங்காய் விடலை போடுவது வழக்கம்.

அதன்பிறகு அங்கிருந்து சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூண்டிகை விநாயகர் கோயில் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் தூண்டிகை விநாயகர் கோயிலைச் சுற்றிலும் வெள்ளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. தூண்டிகை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தேங்காய் விடலை போட வரும் பக்தர்கள், கழிவுநீரை மிதித்தவாறு நடந்து சென்று சாமி தரிசனம் செய்து தேங்காய் விடலை போடுகின்றனர்.

இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் பேரூராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இன்று காலை கழிவுநீர் தேங்கிய பகுதியில் பிளிச்சிங் பவுடர் மட்டும் தூவப்பட்டது. இதேபோல் சன்னதி தெருவில் உள்ள பாதாள சாக்கடையிலும் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: