×

இதர தேர்வுகள் மாற்றமில்லை: மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-க்கு மாற்றம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.!!!

சென்னை: தமிழகத்தில் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி  பாதிப்பு 7000-ஐ நெருங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் 2,100ஐ தாண்டியுள்ளது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை.பேருந்துகளில் நின்று கொண்டு  பயணம் செய்யக்கூடாது,

திரையரங்குகள் மற்றும் ஓட்டல்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10-ம் தேதி முதல் தமிழக அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா  2வது அலை வேகமாக  பரவி வரும் நிலையில், மே 3ம் தேதி முதல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், 2020-2021-ம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு 03-05-2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று வரை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறுவதால் 03.05.2021 அன்று நடைபெறுவதாக இந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் 31.05.2021 அன்று நடைபெறும்.

இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும். மேலும், தேர்வுகள் நடைபெறும்பொழுது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) பின்னர் தெரிவிக்கப்படும். இதனை தேர்வர்கள்  மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில்/ ஊடகத்தில் செய்திக்குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Other exams remain unchanged: Plus 2 translation exam scheduled to be held on May 3 has been shifted to May 31: Government Examinations Directorate announcement. !!!
× RELATED போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை