பாரபட்சம் காட்டுகிறாரா பிரதமர் மோடி?: மத்திய அரசு அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு.!!!

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு தொடங்கியது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் காவிரியின் குறுக்கே ராம் நகர் என்ற பகுதியில் உள்ள மேகதாது என்ற  இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான ஒரு முடிவை கர்நாடக அரசு பல ஆண்டுகளாக எடுத்திருக்கிறது. அதே சமயத்தில் தமிழக அரசை பொறுத்தவரையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டினால் மிகுந்த  பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் தரவேண்டிய தண்ணீரின் அளவானது குறைந்தே உள்ளது. இந்த நிலையில் அங்கு அணையை கட்டினால் நமக்கு தண்ணீரானது முழுமையாக கிடைக்காமல் இருந்துவிடும்  என கூறியுள்ளது. மேலும், விவசாயம் இதனால் பெருமளவு பாதிக்கப்படும். எனவே மேகதாது அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய நீர் வள  அமைச்சகத்தின் ஒப்புதலை கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த ஒப்புதலானது அளிக்கப்படவில்லை. தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை  கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தினார்.

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு தொடங்கியது. மேகதாது அணை கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்ல  கர்நாடக அரசு வனப்பகுதியில்  சாலை அமைத்து வருகிறது. கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மேகதாதுவை ஒட்டிய மலைக்கிராமங்களில் வசிக்கும் கன்னட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அணை கட்டுமானத்தை தடுக்க தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.  மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கேள்விக்குறியாகும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

இதனைபோல், கர்நாடக அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு அனுமதி வழங்குவதற்கு முன்பே மேகதாதுவில்  அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடகா அரசு தொடங்கியதால் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: