கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்!: மத்திய அரசு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 138வது நாளாக இன்றும் தொடர்கிறது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 138 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கொரோனாவை கருத்தில் கொண்டு விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து, கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் தோமர் டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

இவ்விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் இந்த வேண்டுகோள் குறித்து பேட்டியளித்துள்ள ராஷ்டிரிய கிஷான் மஸ்தூர் சங்க தலைவர், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு மத்திய அரசு முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ட்விட்டர் பதிவு மூலம் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: