வேகமாக பரவும் கொரோனா தொற்றின் 2ம் அலை!: சென்னையில் கட்டுப்பாட்டு பகுதியின் எண்ணிக்கை 800 ஆக உயர்வு..மக்கள் அச்சம்..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதியின் எண்ணிக்கை 600ல் இருந்து 800 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நோய்தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கொரோனா நோய் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களில் மட்டும் மிக அதிகமாக உயர்ந்து வருவதே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்திருந்தது.

அதேபோன்று சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலுமே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தொற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதியின் எண்ணிக்கை 800ஐ கடந்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே இடத்தில் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே செல்வதற்கும் வெளியே உள்ள மக்கள் அப்பகுதிக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

தொடர்ந்து மாநகராட்சி எடுத்துவரக்கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதோடு முகக்கவசம் அணிவதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: