தமிழக அரசு தடை எதிரொலி ஊட்டி மாரிம்மன் கோயில் தேரோட்டம் ரத்து

ஊட்டி:  கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு அனுமதியில்லை என தெரிவித்துள்ள நிலையில் ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டி நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்படும்.ஒருமாதம் நடத்தப்படும் திருவிழாவில் நாள்தோறும் ேதர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.

தொடர்ந்து உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் முக்கிய வீதிகளில் குறைந்த நபர்களோடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இக்கட்டுபாடுகள் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மத வழிபாட்டு தலங்களில் இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு திருவிழா நடத்த தடை விதித்ததால் ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேர் ஊர்வலம் மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை. இதனால் தினமும் மாலையில் நடந்து வந்த தேர் பவனி நேற்று முன்தினம் முதல் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக பக்தர்கள் வழக்கம் போல் கோவில் வளாகத்துக்குள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

வரும் 20ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டும் ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா ரத்தானது குறிப்பிடத்தக்கது.ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், மஞ்சகொம்பை நாகராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: