ஊட்டி புதுமந்து பகுதியில் செயல்பாடற்ற நுண் உரம் செயலாக்க மையம்

ஊட்டி: ஊட்டி நகராட்சி 3வது வார்டு புதுமந்து பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நுண் உரம் செயலாக்க மையம் பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டியில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வீடுகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கடைகளில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரமாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் தனித்தனியாக பிரித்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வரும் நகராட்சி வாகனத்தில் சுகாதார பணியாளர்களிடம் கொடுக்கின்றனர்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகள், குப்பைகள் என தினமும் 9 டன்னுக்கு மேல் சேகரமாகிறது. இதில் காய்கறிக்கழிவுகளை கொண்டு ஊட்டி காந்தலில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பொருட்டு கடந்த 2018ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம், ஓல்டு ஊட்டி, புதுமந்து உள்பட 6 இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் இருபுறங்களிலும் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. ஒரு தொட்டியில் 4 டன் குப்பையை சேகரித்து உரமாக்க முடியும். அரவை இயந்திரத்தில் மக்கும் குப்பைகளை போட்டவுடன், அவை அரைத்து வெளியே வரும். அதனை தொட்டிகளில் நிரப்பி மக்க வைக்கும் பணி நடைபெறும்.

பாலிகார்பனேட் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது வெப்பநிலையை உள்பகுதியில் அதிகமாக ஈர்ப்பதால், குப்பைகள் எளிதில் மக்கிவிடும். இந்த உரத்தை விவசாய விளைநிலங்களுக்கு பயன்படுத்த முடியும். 3வது வார்டிற்கு உட்பட்ட புதுமந்து பகுதியில் ரூ.47.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நுண் உர செயலாக்க மையம் துவக்கப்பட்ட புதிதில் சில நாட்கள் செயல்பட்டதோடு சரி தற்போது இயங்குவதில்லை. தற்போது பராமரிப்பின்றி காட்சி பொருளாக உள்ளது. இதேபோல் மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட சில மையங்களுக்கும் இதே கதி தான் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இந்த மையங்களை பயன்படுத்தி மக்கும் குப்பைகளை பயன்படுத்தி உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகள், குப்பைகள் என தினமும் 9 டன்னுக்கு மேல் சேகரமாகிறது.

Related Stories: